தயவு - DAEIOU

Home  | Contact  | Write to us  

 நூல் : அணுவில் ஆண்டவன்


        இந்நூலில், சுவாமி சரவணானந்தா அவர்கள், பின் வரும் கருத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார்கள். அன்பர்கள், படித்து அதன்வழி நின்று, பயன்பெற வேண்டுகின்றோம். தயவு🙏.


        கடவுள் அளப்பரிய பெருவெளி முற்றும் எங்கணும் முழு இயல்போடு விளங்குகின்றவராக இருத்தலின், அவ்வெளி நிறை ஒவ்வொரு அணுவிலும் அப்படி முழுத் தன்மையோடு இயல்பாகவே இருந்து வருதல் உண்மையாம். இவ்வணுவக இறை உண்மை வெளியாகி அனுபவத்தில் விளங்கச் செய்ய வேண்டியே இந்தப் பேருலகப் படைப்பும் செயற்பாடும் தோற்றுவிக்கப்பட்டுள்ளனவாம். அணுவகப் பூத சக்தி வெளிப்படவே இந்நூற்றாண்டு வரை ஆகிவிட்டுள்ளது. மேலும், இப்போது இவ்வணுவகமிருந்து உயிர்ச்சக்தி வெளியாகின்றதையும், அறிவியலார் அனுபவ பூர்வமாக அறியத் தொடங்கி விட்டுள்ளனர். மேல், இந்த அணுவகத்தில் அறிவு சக்தி வெளிப்பட்டுள்ளதையும், அது மனிதனில் ஆன்ம அணுவக ஞான சக்தியாய் விளங்குவதையும், அந்த ஆன்ம சக்திச் செயலால் அற்புத யோக சித்திச் செயல்கள் வெளிப்படுகின்றதையும், மேல் அந்த ஞான யோக சித்தி நிலைக்கும் மேற்பட்ட அருட்சக்தி சித்தி அனுபவ வாழ்வு மெய்யன்பால்தான் வெளிப்படுகின்றது என்ற உண்மையும், வள்ளலார் மூலம் வெளியாகிவிட்டுள்ளன. ஆதலின் இந்த மெய்யன்பு வழி பற்றி இறை இன்ப அனுபவ வாழ்வு, உலகமெல்லாம் பெறுதல் திருவுள்ளச் சம்மதமாம்.

        பொதுவாக, இறைநிலை எவ்வணுவிலும் இருந்து விளங்கி வருகின்றதெனினும், ஒரு குறிப்பிட்ட அணுவுக்கு மனிதக் கருப்பிண்ட வடிவம் தோற்றி வளர்ந்து, உலகிடை வாழும் பக்குவ காலத்தில் இந்த அருள் விளக்கம் மெய்யன்பர்க்கு வெளியாகின்றது என்று அறியலாகின்றதாம். இம் மெய்யன்பின் விளக்க நிலை, ஆதி முதலே கருவிலே ஒளிரத் தொடங்கிய கடவுள் விளக்கம் கொண்ட ஒரு சிற்றணுவாகும். இவ்வணுதான் ஒருவனின் தலை நடுவுள்ளிருந்து மிளிர்கின்ற கடவுளான்ம அணுவாம். இந்த இறையுண்மைச் சிற்றுருவே ‘அன்பு’ அணுவாக விளங்குகின்றதாம். எப்படியெனில், அகண்டமாய் எங்கும் நிறை இறைநிலை குறிப்பது கரமாயும், அவ்விறை நிலையே இந்த ஆன்ம சிற்றணுவில் வெளியாகி உள்ளது. அதன் நிறைவின் ஒரு முடிவிடமாயும் இருக்கின்றதாம். கடவுளின் முதல் நிலை கரமென்றால், முடி நிலை நகர மெய் (ன்) என்று கொண்டு குறித்துள்ளனர் மெய்யுணர்ந்தோர். இப்படி -வும் ன்-னும் அடிமுடியாய்க் கொண்ட இறையைத்தான் கர வடிவத் தலைநடு ஆன்ம பீடத்தே மெய்ப்புள்ளியுரு தோற்றாதே தோற்றி இருந்து கொண்டு கர அருள் ஐந்தொழில் புரிகின்ற இறை வண்ணமாய் மெய்யன்பு ஒன்றினாலே அனுபவப்படுகின்றதாய் அறிகின்றோம். எனவே, நமது ஆன்ம சிற்றணுவாய் உள்ளது உண்மையில் கடவுளின் மெய் அன்பு நிலையே என்பது தெளிவாகின்றதாம்.

        இப்பொழுது விளங்குகின்றது, அன்பெனும் அணு எதுவென்று. அது, அகண்ட பரம்பொருளின் உண்மை கொண்டு விளங்கும் ஆன்ம சிற்றணுவே என்பதாம். இதுதான் "அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியாக" நம் வள்ளலார் அருளாற் கண்டு குறித்ததாம். இந்த அணுவகப் பேரொளி அறிவியலாகும் அருந்தவ யோகியரும் கண்ட பூதப் பேரொளியோ, தெய்வப் பெருஞ்ஜோதியோ அன்று. இந்த அணுவக ஒளி இன்று அருட்பெருஞ்ஜோதியாக அனுபவமாகியுள்ளதாம். முன்னம் அறிவால் அறியப்பட்ட ஒளியால் அடைந்தது மெய்யின்பானுபவ வாழ்வு அல்ல. இப்பொழுது அன்பு பெருகி அருளாய் விளைந்து மெய்யின்பமாய் விளங்கச் செய்கின்றது, வள்ளல் அனுபவமாம்.




        மனிதன் என்றால், சாதாரணமாய், இவ்வுலகில், மானிட யாக்கையோடு தோற்றி விளங்கும் ஓர் ஆருயிர் வடிவமாகக் கருதுகின்றது இயல்பாம். இந்தப் புற நிலையைக் கொண்டே ஒருவனுடைய தோற்றம், வாழ்க்கை வரலாறு, மறைவு இவைகளைக் குறிக்கின்றனர். இது பொறி புலன்களால் மனோ கரணத்தாலும் அறிந்து கொண்ட மனிதனின் விளக்கமேயாகும். இந்நிலைத் தோற்றத்தையே உண்மை எனக்கொண்டு உலகியல் நடந்து கொண்டிருக்கின்றது. இதிலும், இந்திரிய கரண ஒழுக்கக் கேட்டால், தீமையும், அழிவும் அதிகரித்துத் துன்பச் சூழலே எங்கும் பெருகுகின்றதைக் காண்கின்றோம். இந்நிலை மாற வேண்டும். மனிதன் உயர் அறிவும் ஆற்றலும் பெற்று வாழப் பிறந்தவன், ஆகையால், மனிதன் அருளால் உள்ளொளி பெற்று உண்மை கண்டு அன்பும் இன்பமும் செயலில் வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்து மேன்மையுற வேண்டும். மனிதனில் புற நிலைத் தோற்றத்திற்கு அடிப்படையான உள் நிலையுண்மையை யுணர வேண்டும்.




        உண்மையில் நித்திய மனித வடிவம், கடவுளான்ம வண்ணமாயுள்ளதே. அது எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. இவ் ஆன்மாவைக் கலந்து, அகமும் புறமும் நிரம்பியுள்ள அருள் ஒளியே அந்த அருள் நியதிப்படி புறச் சூழ் ஒளியான பலவாகிய தோற்றங்களை ஏற்று ஏற்று இம்மானிடப் பிறவியுருவில், தன்னையும், தன் இறை இயல் உண்மையையும் கண்டு தெளிந்து கொண்டுள்ளதாம். எனவே அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே, எங்கும் என்றும் நிரம்பியிருந்து, பக்குவ ஆன்ம அணுவில், மனிதனின் அனுபவமாய் விளங்குகின்றதாம்.

        மனிதன் இதுகாறும், ஆன்ம அணுவடிவினனாகவே இருந்து வந்தான். அவன் இவ்வுலகில், தன் இயற்கையுண்மையோடு தோன்றினதுமில்லை. வாழ்ந்ததுமில்லை என்றறிகின்றோம்.




        ஆகவே, மனிதன் இதுவரை ஆன்மக் கருவுருவாய்த்தான் இருந்து வந்து இன்றே இந்த சுத்த சன்மார்க்க காலத்தில், அருள் அனுபவத்தோடு நிறைவு பெற்ற அருட்பிரகாச வள்ளல் வடிவுடன் தோன்றியுள்ளான் என்பது உண்மை. இதுவரை சென்ற நாளெல்லாம், பலவகைச் சூழலில் இருந்த காலமெல்லாம் இம்மன்னிய நித்திய மனிதனுக்குப் பிறவா நாளேயாகும். இப்பொழுதே பிறந்து விட்டுள்ளான் என்பது சத்தியம். இது மனிதனின் உண்மைத் தோற்றம் என்பதைவிட, நித்திய பரம் பொருளாகிய கடவுளே ஆன்ம அணுவகமிருந்து ஆண்டு வந்த காலம் கழிந்து, அவரே தன் அருள் ஒளியையே மனிதனின் வண்ணமாக்கிக் கொண்டு அருளாட்சியால் உலகத்தை உய்விக்கத் தோற்றி விட்டுள்ளதாகக் கொள்ளல் பொருந்தும்.




        By the Grace of ThiruArul and GuruArul, this Digital Library is kept free for the public and enabling the Sanmarkis living world wide, to know more about the DAEIOU explanatory notes given by Dayanidhi Swami Saravanananda - Dindigul. This website is kept opened on behalf of Vallalar's 200th Birthday anniversary (on 05.Oct.2022). We all should be very much thankful to Daeiou. S.S.Sivaram ayya and Daeiou. S.R.Ramalingam (late) to enable this digital platform for us. Kindly requesting to make a note that all the book materials included in this website are subject to Copyright acts.

Copyright © 2022 | DAEIOU Book Publishing Trust

Connect with Us :